Saturday, November 20, 2010

திசை திருப்ப முயல்கிறார் கருணாநிதி: புரட்சிதலைவிஅம்மா குற்றச்சாட்டு

சென்னை, நவ. 18: 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் மக்களை திசைதிருப்பும் முயற்சியில் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சிதலைவிஅம்மா  குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து  புரட்சிதலைவிஅம்மா  வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறும் கணக்கு தணிக்கை அறிக்கை அனுமானத்தின் அடிப்படையிலானது. அதன் அடிப்படையில் இறுதித் தீர்ப்பை எழுத முயல்வது முறைதானா என்று கருணாநிதி கேள்வி எழுப்பியிருக்கிறார்.இழப்பின் மதிப்புதான் அனுமானம்; இழப்பு அனுமானம் அல்ல. அதாவது, |1 லட்சத்து 76 ஆயிரத்து 379 கோடி இழப்பு என்பது, |1 லட்சத்து 50 ஆயிரம் கோடியாகவோ அல்லது |2 லட்சம் கோடியாகவோ இருக்கலாம். ஆனால், இழப்பே ஏற்படவில்லை என்று கூற முடியாது. 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மூலம் அரசுக்கு கிடைத்த வருவாய் |10 ஆயிரம் கோடி மட்டுமே. ஆனால், 3-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மூலம் |1 லட்சம் கோடிக்கும் மேல் அரசுக்கு கிடைத்துள்ளது. எனவே, லட்சக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு என்பது அனுமானத்தின் அடிப்படையில் அல்ல என்பதை கருணாநிதிக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட குறைகளுக்காக நான் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தேனா என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.  மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளில் உள்ள குறைகளை தணிக்கைத் துறை சுட்டிக்காட்டுவது வழக்கமானதுதான். இவை அரசுகளின் மீது கூறப்படும் பொதுவான குறைபாடுகள். அதற்காக எந்த முதல்வரும் ராஜிநாமா செய்ய மாட்டார்கள்.2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தைப் பொருத்தவரை, முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவை இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை கடுமையாக சாடியிருக்கிறது. பிரதமரின் கருத்து நிராகரிக்கப்பட்டது; சட்ட அமைச்சகத்தின் ஆலோசனை புறக்கணிக்கப்பட்டது;  கடுமையான எதிர்ப்பையும் மீறி முதலில் வருபவருக்கு முதலில் என்ற கொள்கையை கடைப்பிடித்ததன் நோக்கம்; அதையும் சரியாக கடைப்பிடிக்காதது முதலானவை தொடர்பாக தணிக்கை அறிக்கையில் பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இவையனைத்தும் ஆ.ராசாவின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளே தவிர, மத்திய அரசின் மீது சுமத்தப்பட்ட பொதுவான குற்றச்சாட்டுகள் அல்ல. அதனால்தான் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புகின்றன. இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளாமல், மக்களை திசை திருப்பும் வகையில் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.தமிழக அரசின் ஆண்டு வருவாய் சுமார் |60 ஆயிரம் கோடி. அதைப்போல மூன்று மடங்கு தொகை முறைகேடு செய்யப்பட்டது என்பது சாதாரண விஷயமல்ல என்று   புரட்சிதலைவிஅம்மா தெரிவித்துள்ளார்.